Loading...
உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல்: 4 இந்திய மாலுமிகள் பலி! மத்திய அரசு கடும் கண்டனம்
சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் பலி

உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல்: 4 இந்திய மாலுமிகள் பலி! மத்திய அரசு கடும் கண்டனம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 21, 2026
08:17 am

செய்தி முன்னோட்டம்

உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து சோளப் பொருட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு இந்தியர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருங்கடலில் மீண்டும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய மாலுமிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்புக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

விவரங்கள்

என்ன நடந்தது?

கினியா-பிசாவ் நாட்டின் கொடியுடன் இயங்கி வந்த எம்வி கோல்டன் லியோ என்ற சரக்குக் கப்பல், ஜூலை 19 ஞாயிற்றுக்கிழமை மாலை உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

கப்பலில் 5 இந்தியர்கள் உட்பட மொத்தம் 17 மாலுமிகள் இருந்தனர். துறைமுகத்தைக் கடந்து சென்ற சில நிமிடங்களிலேயே, ரஷ்யாவின் 3 குரூஸ் ஏவுகணைகள் இந்த கப்பலைத் தாக்கின.

இதில் கப்பல் பயங்கரமாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இந்தத் தாக்குதலில் 9 மாலுமிகள் மற்றும் ஒரு மாலுமி வழிகாட்டி என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 4 பேர் இந்தியர்கள். படுகாயமடைந்த மற்றொரு இந்தியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எஞ்சிய 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த கப்பல் மும்பையை சேர்ந்த நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டனம்

வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம்

"வர்த்தகக் கப்பல்கள் மற்றும் அப்பாவிப் பணியாளர்களைக் குறிவைத்துத் தாக்குவதும், சர்வதேசக் கடல் வழித்தட சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிப்பதும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது".

"உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் சூழலைக் கூர்ந்து கவனித்து வருகிறது. பாதிக்கப்பட்ட இந்தியர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்" என வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கண்டனத்தை பதிவு செய்தது.

உலகின் 11% சோளம் மற்றும் 6% கோதுமை உக்ரைனிலிருந்தே ஏற்றுமதியாகிறது. இந்தத் தாக்குதல்கள் உலகளவில் தானிய விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்திய அரசு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டு வரத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், வர்த்தகக் கப்பல் மீதான இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT