ரஷ்யாவுக்குள் 2,000 கிமீ ஊடுருவி உக்ரைன் ட்ரோன் தாக்குதல்! முன்னணி ஆன்லைன் நிறுவனத்தின் கிடங்கில் தீ
செய்தி முன்னோட்டம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடர்ச்சியான தீவிரமான போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், உக்ரைன் தனது நீண்டதூர ட்ரோன் தாக்குதல் திறனை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில், உரல் மலைப் பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் நான்காவது பெரிய நகரமான யேகாடெரின்பர்க்கில் உள்ள வைல்ட்பெரீஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய கிடங்கு மீது உக்ரைனின் ட்ரோன்கள் துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளன. ரஷ்யாவின் முதன்மை இ-காமர்ஸ் நிறுவனமான இதன் மையத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேத விவரங்கள்
தாக்குதலின் சேத விவரங்கள் மற்றும் தொடர் அச்சுறுத்தல்கள்
யேகாடெரின்பர்க் நகரில் உள்ள இந்தக் கிடங்கின் கூரை மீது மூன்று ட்ரோன்கள் விழுந்து தாக்கியதால் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
இருப்பினும், அங்கிருந்த 800 ஊழியர்கள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் எந்தவித உயிரிழப்பும் காயங்களும் ஏற்படவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்து சில வாரங்களில் மட்டும் வைல்ட்பெரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட லாஜிஸ்டிக்ஸ் மையங்களை உக்ரைன் இலக்கு வைத்துத் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் ரஷ்ய பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரப் போக்குவரத்து அமைப்புகளையும் சீர்குலைக்க உக்ரைன் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
கூட்டுத் திட்டம்
உள்நாட்டு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஐரோப்பியக் கூட்டுத் திட்டம்
கிழக்கு எல்லைப் பகுதியில் ரஷ்யப் படைகளின் அழுத்தம் அதிகரித்து வரும் சூழலில், உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் தயாரிப்பை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை பற்றாக்குறையை ஈடுசெய்ய 10 ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து ஏவுகணை எதிர்ப்பு தடுப்பு கவசத் திட்டத்தை உருவாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உக்ரைன் தயாரித்துள்ள ட்ரோன் தொழில் நுட்பத்தின் வெற்றியால் 9 நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் 15 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.