பிபிசிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம்
கடந்த வாரம் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இந்திய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதை "ஆய்வு" என்று குறிப்பிட்ட வருமான வரித்துறையினர், பிபிசி சரியாக வருமானத்தை கணக்கு காட்டவில்லை என்று குற்றம் சாட்டினர். இந்நிலையில், நேற்று(பிப் 21) நடந்த பாராளுமன்ற விவாதத்தின் போது இங்கிலாந்து அரசாங்கம், பிபிசிக்கு ஆதரவாக பேசியுள்ளது. சில வாரங்களுக்கு முன், பிரதமர் மோடி மற்றும் 2002 குஜராத் கலவரம் குறித்து பிபிசி ஒரு ஆவண தொடரை வெளியிட்டிருந்தது. இதை ஆளும் பாஜக தலைவர்கள் பலர் கடுமையாக கண்டித்தனர். இதற்கிடையில் பிபிசியில் வருமான வரித்துறை ஆய்வும் நடத்தப்பட்டதால் இதை பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான செயல் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இங்கிலாந்து அரசாங்கம் என்ன சொல்கிறது?
"பிபிசியுடன் நாங்கள் நிற்கிறோம். பிபிசிக்கு நிதியளிக்கிறோம். பிபிசி உலக சேவை மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நினைக்கிறோம். பிபிசிக்கு அந்த தலையங்க சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அந்த சுதந்திரம் முக்கியமானது, இந்தியாவில் உள்ள அரசாங்கம் உட்பட உலகம் முழுவதும் உள்ள நமது நண்பர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம்." என்று டோரி எம்பி டேவிட் ரட்லி கூறியுள்ளார். இந்தியாவில் இருக்கும் கருத்துச் சுதந்திரம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதை கூறினார். மேலும், இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் "பரந்த மற்றும் ஆழமான உறவு" இருப்பதாகவும், இந்த குறிப்பிட்ட பிரச்சினை குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேசி இருப்பதாகவும் ரட்லி கூறி இருக்கிறார்.