ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகள் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் சில வீரர்கள் காயமடைந்த நிலையில், அதற்கு பதிலடியாக ஈராக்கில், ஈரான் ஆதரவு போராளிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, கட்டாய்ப் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு பயன்படுத்திய மூன்று இடங்கள் தாக்கப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது. அமெரிக்கத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் உட்பட 18 பேர் காயமடைந்ததாகவும் கூறும் ஈராக், இத்த தாக்குதலை "விரோத செயல்" என கண்டித்துள்ளது. இந்த தாக்குதல் "அவசியமானது" என தெரிவித்துள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், அதிபர் ஜோ பைடன் தாக்குதல்களை அங்கீகரித்ததாக கூறியுள்ளார்.
அமெரிக்க வீரர் கவலைக்கிடம்
ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள இர்பில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 3 வீரர்கள் காயம் அடைந்தனர், அதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற போராளிகளால், இர்பில் ராணுவ தளம் இதற்கு முன்னர் பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஈராக், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் நட்பு நாடாகும். ஈராக் அரசின் அழைப்பை ஏற்று சுமார் 2,500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள், இஸ்லாமிக் ஸ்டேட்(ஐஎஸ்) தீவிரவாத அமைப்பின் வளர்ச்சியை தடுப்பதற்காக அங்கு பணியில் உள்ளனர். அக்டோபர் ஏழாம் தேதிக்கு பின்னர், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவுக்கு எதிராக, அந்நாட்டின் முகாம்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற போராளி குழுக்களால் தாக்குதல் நடத்தப்படுகிறது.