ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கேரளாவைச் சேர்ந்த 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
செய்தி முன்னோட்டம்
கொலைக் குற்றவாளியாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த தகவலை உறுதி செய்து, தூக்கிலிடப்பட்டவர்கள் முகமது ரினாஷ் அரங்கிலோட்டு மற்றும் முரளீதரன் பெரும்தட்டா வலப்பில் என தெரிவித்துள்ளது.
சட்ட உதவி மற்றும் கருணை மனுக்கள் உள்ளிட்ட ராஜதந்திர முயற்சிகள் இருந்தபோதிலும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் பிப்ரவரி 28, 2025 அன்று இந்திய தூதரகத்திற்குத் தெரிவித்தனர்.
இறந்தவரின் குடும்பங்களுக்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டு இறுதிச் சடங்குகளில் பங்கேற்க உதவியதாக வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
முகமது ரினாஷ் உடல் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் புதைக்கப்பட்டது.
ஷாஜாதி
தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட ஷாஜாதி
கூடுதலாக, ஒரு குழந்தையைக் கொன்றதற்காக தண்டனை பெற்ற மற்றொரு இந்தியரான ஷாஜாதி பிப்ரவரி 15 அன்று தூக்கிலிடப்பட்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உச்ச நீதிமன்றமான கேசேஷன் நீதிமன்றம், அவரது மரண தண்டனையை உறுதி செய்தது.
அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது இறுதிச் சடங்கு மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும் என சில தினங்களுக்கு முன்பு வெளியுறவுத் துறை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான வழக்கு அவரது பெற்றோரால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வெளியுறவுத் துறை சார்பாகப் பேசிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேதன் சர்மா மற்றும் வழக்கறிஞர் ஆஷிஷ் தீட்சித் ஆகியோர் இதை உறுதிப்படுத்தினர்.