'எம்பி ஹோண்டியஸ்' சொகுசு கப்பலில் 2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று உறுதி! சிகிச்சைக்காக நெதர்லாந்து மாற்றம்!
செய்தி முன்னோட்டம்
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'எம்பி ஹோண்டியஸ்' என்ற சொகுசு கப்பலில் பயணித்த இரண்டு இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் (Hantavirus) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அர்ஜென்டினாவிலிருந்து பயணத்தைத் தொடங்கிய 'எம்பி ஹோண்டியஸ்' சொகுசு கப்பலில் கடந்த சில நாட்களாக மருத்துவ நெருக்கடி நிலவி வருகிறது. இந்தக் கப்பலில் பயணித்தவர்களில் இதுவரை மூன்று பேர் ஹன்டா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மூன்று பேர் பலி
நடுக்கடலில் நேர்ந்த துயரம்
சுவிட்சர்லாந்திலிருந்து ஸ்பெயின் நோக்கிப் பயணித்த இந்தச் சொகுசு கப்பலில் கடந்த ஒன்றாம் தேதி திடீர் மருத்துவ நெருக்கடி ஏற்பட்டது. கப்பலில் பயணித்த மூன்று பயணிகள் ஹன்டா வைரஸ் அறிகுறியுடன் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கப்பல் நடுக்கடலிலேயே தனிமைப்படுத்தப்பட்டது. ஸ்பெயின் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட விரிவான சோதனையில், கப்பல் குழுவில் பணியாற்றி வந்த இரண்டு இந்தியர்களுக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மேல் சிகிச்சை
பாதிக்கப்பட்ட இந்தியர்களின் நிலை
ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகம் இது குறித்து வெளியிட்டுள்ள விளக்கத்தில் தொற்று பாதிப்புக்குள்ளான இரண்டு இந்தியர்களும் தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவர்கள் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும் மேலதிக சிகிச்சைக்காக நெதர்லாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்குள்ள சிறப்பு மருத்துவமனையில் அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன.
பரவும் விதம்
ஹன்டா வைரஸ்
தற்போது கப்பலில் பரவியிருப்பது ஹன்டா வைரஸின் 'ஆண்டிஸ்' வகை என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடியது. பொதுவாக எலிகளின் சிறுநீர், எச்சம் அல்லது உமிழ்நீர் மூலம் காற்றில் பரவும் துகள்களை சுவாசிப்பதன் மூலம் இது மனிதர்களுக்குப் பரவுகிறது. மற்ற ஹன்டா வைரஸ் வகைகளை விட, இந்த 'ஆண்டிஸ்' வகை வைரஸ் மிக நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களிடையே (Human-to-human) பரவக்கூடிய வாய்ப்பு மிகக் குறைவான அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காய்ச்சல், தசை வலி, சோர்வு மற்றும் கடுமையான சுவாசக் கோளாறுகள் இதன் முக்கிய அறிகுறிகளாகும்.