துருக்கிய தேர்தலில் மீண்டும் வெற்றி: இருபது ஆண்டுளை தாண்டியும் அசராத எர்டோகன் ஆட்சி
செய்தி முன்னோட்டம்
துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் நேற்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, தனது இருபது ஆண்டு கால ஆட்சியை மேலும் நீடித்துள்ளார்.
69 வயதான அவர், ஒரு தலைமுறைக்குள் துருக்கியின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளித்தவர் ஆவார்.
அதிக பணவீக்கம் மற்றும் மிகப்பெரும் பூகம்பத்திற்குப் பிறகு நாடு தத்தளித்து வரும் நிலையில், மூன்றாவது தசாப்தத்திற்கு தனது சர்வாதிகார ஆட்சியை அவர் இந்த தேர்தலின் மூலம் நீட்டித்துள்ளார்.
இதனால், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் எர்டோகனின் அதிகாரம் வலுவடையும்.
மேலும், இந்த தேர்தல் முடிவுகள் தலைநகர் அங்காராவுக்கு அப்பாற்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தும்.
துருக்கி, ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய இரு கண்டங்களையும் பகிர்ந்து கொண்ட ஒரு நாடாகும்.
details
52% வாக்குகளைப் பெற்று எர்டோகன் வெற்றி
99% வாக்குப் பெட்டிகள் எண்ணப்பட்டிருக்கும் நிலையில், அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் எர்டோகன் 52% வாக்குகளைப் பெற்றதாகக் காட்டியது, அவரது போட்டியாளரான கெமல் கிலிக்டரோக்லுவுக்கு 48% வாக்குகள் கிடைத்தன.
துருக்கியின் தேர்தல் குழுவின் தலைவர் இந்த வெற்றியை உறுதிப்படுத்தினார். நிலுவையில் உள்ள வாக்குகளை கணக்கிட்டாலும், எர்டோகனுக்கு சாதகமாக தான் அமையும் என்று அவர் கூறினார்.
இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் நடைபெற்ற கூட்டங்களில் பேசிய எர்டோகன், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதி பதவியை தன்னிடம் ஒப்படைத்ததற்காக நாட்டுக்கு நன்றி தெரிவித்தார்.
"21 ஆண்டுகள் இருந்ததை போல், நாங்கள் உங்கள் நம்பிக்கைக்கு தகுதியானவர்களாக இருப்போம்," என்று அவர் முடிவுகள் வெளிவந்த பிறகு தனது ஆதரவாளர்களிடம் கூறினார்.