எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள வேறு வழியில்லை! ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக டீசல் வாங்க டிரம்ப் ஒப்பந்தம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக நாட்டில் தீவிரமடைந்து வரும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கவும், டீசல் விலையை குறைக்கவும் ரஷ்யாவிடமிருந்து நேரடியாக டீசல் இறக்குமதி செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்பந்தம் செய்துள்ளார். இருப்பினும், டிரம்பின் இந்த அதிரடி முடிவை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளதுடன், இது போருக்கான முதலீடு என்றும் சாடியுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
பேச்சுவார்த்தை
டிரம்ப் - புடின் தொலைபேசி பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நடத்திய தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் சர்வதேச சந்தைக்கு உடனடியாக 3,00,000 டன் டீசலை வழங்கிட ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், நவம்பரில் 5,00,000 டன்னும், அதைத் தொடர்ந்து மேலும் 10 லட்சம் டன் டீசலும் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கத் கருவூலத் துறை தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது.
விலையைக் குறைக்க இலக்கு
எரிபொருள் விலையைக் குறைப்பதே எனது முதல் இலக்கு
விவசாயிகள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் சாமானிய அமெரிக்கர்களுக்கு எரிபொருள் விலையை குறைவாக வைத்திருப்பதே தனது அரசாங்கத்தின் முதன்மை இலக்கு எனத் தெரிவித்துள்ள டிரம்ப், "எங்களது இந்த முடிவால் அமெரிக்கா மற்றும் உலகளவில் டீசல் விலையானது மிக வேகமாகவும் பெருமளவிலும் குறையும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஹார்முஸ் ஜலசந்தி மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடும், ரஷ்ய எரிசக்தி ஒப்பந்தமும் சேர்ந்து உலகளவில் எரிபொருள் சந்தையை நிலைப்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
போருக்கான நிதி
போருக்கான நிதி உதவி என உக்ரைன் அதிபர் பகிரங்க குற்றச்சாட்டு
டிரம்பின் இந்த அறிவிப்பிற்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது, அந்நாடு உக்ரைன் மீது மேலும் பல கொடூரத் தாக்குதல்களை நடத்தத் தேவையான நிதியை அள்ளிக் கொடுப்பதற்கு சமமாகும்.
புடினுக்கு அளிக்கப்படும் இதுபோன்ற சலுகைகள் அமைதியைக் கொண்டுவராது." என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பரஸ்பர போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருக்கும் நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ரஷ்யாவை மேலும் வலுப்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.