
2026 தேர்தலில் தபால் வாக்கு, மின்னணு வாக்களிக்கும் இயந்திரங்களுக்கு தடை? புதிய மாற்றத்திற்கு தயாராகும் அமெரிக்கா
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க தேர்தல் முறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று (ஆகஸ்ட் 18) ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட இருப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்களிப்பு இயந்திரங்கள் அமெரிக்காவில் தடை செய்யப்படும். சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்த முறைகள் துல்லியமற்றவை மற்றும் சர்ச்சைக்குரியவை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். அதிபர் டிரம்பின் கூற்றுப்படி, புதிய ஆணை வாட்டர்மார்க் பேப்பர் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்த கட்டளையிடும். இது வேகமான மற்றும் நம்பகமான முறை என்று அவர் நம்புகிறார். மேலும், இந்த பாரம்பரிய முறை தேர்தல் நாளன்று உடனடி முடிவுகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
தபால் வாக்களிப்பு
தபால் வாக்களிப்பு முறை உள்ள ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே என டிரம்ப் கருத்து
தபால் வாக்களிப்பு முறையைப் பயன்படுத்தும் ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே என்றும், மற்ற நாடுகள் முறைகேடுகள் காரணமாக இந்த முறையை கைவிட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிர்வாக ஆணை 2026 இடைத்தேர்தல்களுக்கு நேர்மையைக் கொண்டுவர வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிபர் டிரம்ப் கூறினார். மேலும், மாகாணங்கள் கூட்டாட்சி அரசின் முகவர்களாக செயல்படுவதால், நாட்டின் நலனுக்காக அதிபரின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். அதிபர் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு, தேர்தல் நேர்மை குறித்து அவர் எழுப்பி வரும் சவால்களுக்கு ஒத்ததாக உள்ளது. கடந்த மார்ச் மாதம், வாக்காளர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்று மற்றொரு நிர்வாக ஆணையில் அவர் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.