"அமெரிக்காவின் இரத்தத்தை விஷமாக்குகிறார்கள்"- புலம்பெயர்ந்தோர் குறித்து ட்ரம்ப் பேச்சு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நியூ ஹாம்ப்ஷயர் பேரணியில் புலம்பெயர்ந்தோர், "அமெரிக்காவின் இரத்தத்தை விஷமாக்குகிறார்கள்" என பேசினார். புலம்பெயர்ந்தோர் மற்றும் அமெரிக்க சமூகத்தின் சில பிரிவுகளை, முன்னாள் அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து இவ்வாறு விமர்சித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன், தான் விரும்பாத அமெரிக்க சமூகத்தின் பிரிவுகளை விவரிக்க "பூச்சிகள்" என்ற சொல்லை அவர் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அவரின் முந்தைய பேச்சு கடுமையான கண்டனங்களுக்கு உள்ளான நிலையில், நியூ ஹாம்ப்ஷயர் பேரணியில், "கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், பாசிஸ்டுகள் மற்றும் நாட்டின் எல்லைக்குள் பூச்சிகளைப் போல வாழும் தீவிர இடதுசாரி கொள்கை கொண்டவர்களை வேரறுக்கப் போவதாக" அச்சுறுத்தல்விடுத்தார்.
வெள்ளை இனத்தின் மேலாதிக்கத்தை எதிரொலிக்கும் ட்ரம்பின் பேச்சு
"இந்த நாட்டின் ரத்தத்தை விஷமாக்குகிறார்கள். அதைத்தான் அவர்கள் செய்துள்ளார்கள்" என புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக ட்ரம்ப் கூட்டத்தினரிடம் பேசினார். "அவர்கள் தென் அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள மனநல நிறுவனங்கள் மற்றும் சிறைச்சாலைகளை விஷமாக்குகின்றன. அவர்கள் நம் நாட்டிற்கு, ஆப்பிரிக்காவிலிருந்து, ஆசியாவிலிருந்து, உலகம் முழுவதும் வருகிறார்கள்" என்றார். இரண்டாவது முறையாக அமெரிக்க முன்னாள் அதிபர், " ரத்தத்தை விஷமாக்குகிறார்கள்" என பேசியுள்ள நிலையில், அவரின் வெள்ளை இனத்தின் மேலாதிக்கத்தை எதிரொலிக்கும் சொல்லாட்சி என கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.
மீண்டும் அதிபரானால் தீவிர கொள்கைகளை அமல்படுத்தப்போகும் ட்ரம்ப
அடுத்த ஆண்டு நடக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் மீண்டும் ட்ரம்ப வெல்லும் பட்சத்தில், கடந்த ஆட்சியில் வகுக்கப்பட்ட குடியேறுபவர்களுக்கு எதிரான கொள்கைகளை விரிவு படுத்துவதற்கான திட்டங்களை வைத்துள்ளதாக சிஎன்என் கூறுகிறது. ட்ரம்பின் கடந்த ஆட்சியில், எல்லைப் பகுதியில் சட்டவிரோத குடியேறிகளின் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட இஸ்லாமிய பெரும்பான்மை மற்றும் ஆப்பிரிக்கா நாட்டினருக்கான, அமெரிக்க பயண தடை மீண்டும் அமல்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்படும் என நேற்று தெரிவித்தார்.