
இந்தியா அனைத்து வரிகளையும் நீக்க முன்வந்ததாம்; புதிய சர்ச்சையைக் கிளப்பிய டொனால்ட் டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா அனைத்து வரிகளையும் நீக்க முன்வந்ததாக தெரிவித்து புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ஆனாலும், இது மிகவும் தாமதம் என்று அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவுடனான நீண்டகால பொருளாதார உறவை முற்றிலும் ஒருதலைப்பட்சமான பேரழிவு என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்குத் தலைகீழ் வரிகளை விதித்து வருவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக சமநிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பதிவு
ட்ரூத் சோஷியல் பதிவில் கூறியது என்ன?
டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் "சிலருக்குத் தெரியாத விஷயம் என்னவென்றால், நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைந்த வர்த்தகத்தையே செய்கிறோம். ஆனால், அவர்கள் எங்களுடன் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்கிறார்கள். அவர்கள் எங்களிடம் பெரிய அளவில் பொருட்களை விற்கிறார்கள். ஆனால், நாங்கள் அவர்களுக்கு மிகக் குறைவாகவே விற்கிறோம்." என்று கூறியுள்ளார். இந்தியா, இப்போது வரிகளை பூஜ்யமாகக் குறைக்க முன்வந்தாலும், இது மிகவும் தாமதமாகிவிட்டது என்றும் பல வருடங்களுக்கு முன்பே இதைச் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இந்தியா எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களுக்காக ரஷ்யாவைச் சார்ந்து இருப்பதையும் சுட்டிக்காட்டிய டிரம்ப், இந்தப் பிரிவுகளில் அமெரிக்காவிடமிருந்து மிகக் குறைவாகவே வாங்குகிறது என்றும் கூறியுள்ளார்.
நேரம்
டிரம்ப் கருத்தின் நேரத்தின் முக்கியத்துவம்
டிரம்பின் இந்தக் கருத்து, அவரது நிர்வாகம் இந்தியா மீது 50% கூட்டு வரியை விதித்த சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது. இந்த வரி விதிப்பு, இந்தியாவின் ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட பல முக்கிய ஏற்றுமதிப் பொருட்களை இலக்காகக் கொண்டுள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், இந்த வரிவிதிப்பு நியாயமற்றது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியா அடி பணியானது என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இதற்கிடையே, சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டில் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா அதிகம் நெருக்கம் காட்டி அமெரிக்காவிற்கு எதிராக பேசியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் விரக்தியில் இந்த பதிவை வெளியிட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.