Loading...
ஹார்முஸ் ஜலசந்தி இனி அமெரிக்காவுக்கே சொந்தம்! புதிய மேப் வெளியிட்டு டொனால்ட் டிரம்ப் அதிரடி
ஹார்முஸ் ஜலசந்தியை புதிய அமெரிக்கப் பகுதி என அறிவித்து மேப் வெளியிட்டார் டிரம்ப்

ஹார்முஸ் ஜலசந்தி இனி அமெரிக்காவுக்கே சொந்தம்! புதிய மேப் வெளியிட்டு டொனால்ட் டிரம்ப் அதிரடி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 23, 2026
02:29 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், சர்வதேச அளவில் எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி கடல் பாதையை புதிய அமெரிக்கப் பகுதி என சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் மீண்டும் பகிர்ந்துள்ளார். ஜலசந்தியைத் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், ஈரானும் இதற்கு இணையான அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறது.

ஈரான் கண்டனம்

ஈரானின் கடுமையான கண்டனமும் போஸ்ட்-அமெரிக்கன் ஆர்டர் எச்சரிக்கையும்

டிரம்பின் இந்தக் கருத்துகளுக்கு ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெஸாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"அமெரிக்காவால் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க முடியாத இயலாமைக்கும், அந்தப் பகுதியைத் தங்களுடையது எனக் உரிமை கோருவதற்கும் இடையே உள்ள இடைவெளி, வாஷிங்டனுக்கும் அந்த ஜலசந்திக்கும் இடையே உள்ள 7,000 மைல் தூரத்தை விடப் பெரியது." என்று அவர் கிண்டலாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் பாரசீக வளைகுடா பகுதியில் "அமெரிக்க ஆதிக்கம் அற்ற புதிய சகாப்தத்திற்கு (Post-American order) அனைவரையும் வரவேற்கிறோம்." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத் தடை

ஈரான் மீது வரலாற்றின் மிகக் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகள்

அமெரிக்கா தனது பொருளாதாரப் போரைத் தீவிரப்படுத்தும் நோக்கில், ஈரான் மீது வரலாற்றின் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தயாராகி வருகிறது.

அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ள நிலையில், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முதன்மை நாடான சீனாவுக்கும், ஈரானிய எண்ணெய் வர்த்தகத்திற்கு ஒத்துழைக்கக் கூடாது என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஆனால் சர்வதேச சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய இரண்டாம் நிலைத் தடைகளை ஏற்க முடியாது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ADVERTISEMENT

கச்சா எண்ணெய்

உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாக ஈரான் தொடர்ந்து கூறி வரும் நிலையிலும், அங்கீகரிக்கப்படாத எண்ணெய் சமையல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளதாலும், அப்பகுதியில் கப்பல் போக்குவரத்துப் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

போர் தொடங்குவதற்கு முன்பு தினமும் 2 கோடி பீப்பாய்களுக்கும் அதிகமாகக் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்ட இந்த வழியில், தற்போது அமெரிக்க ராணுவ உதவியுடன் தினமும் சராசரியாக 80 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே கொண்டு செல்ல முடிகிறது.

இந்த அசாத்தியமான தடையால் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடும் விலையேற்றமும் ஏற்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

பேச்சுவார்த்தை

அண்டை நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை மற்றும் அமைதிக்கான பேச்சுவார்த்தை

அமெரிக்காவின் இந்த பொருளாதாரப் போருக்கு ஆதரவளிக்கும் அண்டை நாடுகளைத் தங்களின் எதிரிகளாகக் கருத நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.

அதேவேளையில், நாட்டின் இறையாண்மை மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்கும் அதே நேரத்தில் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயார் என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது பிராந்தியமாக டிரம்ப் தொடர்ந்து உரிமை கோருவது, நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

ADVERTISEMENT