ஈரான் போரில் 770க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயம் மற்றும் பலி; பென்டகன் அதிகாரப்பூர்வ தகவல்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 6வது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள சூழலில், இந்த மோதலில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 770ஐ கடந்துள்ளதாகப் பென்டகன் தெரிவித்துள்ளது. தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியின் படி, பென்டகனின் அதிகாரப்பூர்வப் போரிழப்புத் தரவுத் தளத்தில் இதுவரை 18 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 756 வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவிற்கு இந்தப் போரினால் ஏற்பட்டுள்ள மனித ஆற்றல் இழப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காயமடைந்தவர்கள்
தற்காலிக அமைதிக்கு மத்தியிலும் உயரும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பெரிய அளவிலான தாக்குதல்கள் எதுவுமின்றித் தற்காலிக போர்நிறுத்த சூழல் நிலவி வருகிறது.
இருப்பினும், போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களின் விவரங்கள் மருத்துவ அமைப்பிலிருந்து பென்டகனின் முதன்மைத் தரவுத் தளத்திற்கு வந்து சேர்வதில் ஏற்பட்ட காலதாமதமே தற்போது எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளதற்குக் காரணம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான 14 அம்சப் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் காலம் முடிவடைந்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் அதை மேலும் நீட்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவர்சீஸ் ஆபரேஷன்ஸ்
'ஓவர்சீஸ் ஆபரேஷன்ஸ்' என்ற புதிய பிரிவை உருவாக்கிய பென்டகன்
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான போர் ஆபரேஷன் எபிக் ஃபியூரி என்ற பெயரில் தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 18 வீரர்கள் பலியாகியுள்ளனர்.
ஆனால் ஜூலை 7 ஆம் தேதிக்குப் பிறகு ஏற்பட்ட போரிழப்புகளைக் குறிக்க பென்டகன் ஓவர்சீஸ் ஆபரேஷன்ஸ் என்ற புதிய பிரிவை உருவாக்கியுள்ளது.
போரில் காயமடைந்த பெரும்பாலான வீரர்களுக்கு எதிரிகளின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் மூளையில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் பென்டகன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குளறுபடி
தரவுத் தளத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் எழுந்த சந்தேகங்கள்
ஈரானியத் தாக்குதல்கள் தொடர்ந்த நிலையிலும், பென்டகனின் போரிழப்புத் தரவுத் தளத்திலிருந்து சில வீரர்களின் பெயர்கள் மற்றும் இறப்புப் பட்டியல்கள் தற்காலிகமாக மறைந்து பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்குத் தொழில்நுட்பக் கோளாறுகளே காரணம் எனப் பாதுகாப்புத் துறை விளக்கமளித்த போதிலும், போரிழப்புகளை மறைக்க பென்டகன் முயல்வதாக விமர்சனங்கள் எழுந்தன.
தற்போதைய நிலவரப்படி இரு நாடுகளுக்கும் இடையிலான அமைத்துப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டு, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.