சைபர் கமாண்ட் வீரர்களுக்கு ஊதியக் குறைப்பு: டிரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க ராணுவத்தினர் எதிர்ப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் எதிரி நாடுகளின் கணினி அமைப்புகளை ஹேக் செய்யவும், நாட்டின் முக்கிய பாதுகாப்பு நெட்வொர்க்குகளைப் பாதுகாக்கவும் நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தின் சைபர் கமாண்ட் வீரர்களுக்கான ஊக்கத்தொகையில் ஆண்டுக்கு 12,000 டாலர் (மாதம் 1,000 டாலர்) வரை குறைப்பதற்கு பென்டகன் திட்டமிட்டுள்ளது. ஈரானுடனான மோதல், சர்வதேச பதற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அச்சுறுத்தல்களால் பணிச்சுமை உச்சத்தில் இருக்கும் இவ்வேளையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, ராணுவ வீரர்களிடையே கடுமையான எதிர்ப்பையும் அதிருப்தியையும் கிளப்பியுள்ளது.
சைபர்காம் 2.0
மறுசீரமைப்பும் ஊதியக் குறைப்பும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்துள்ள 'சைபர்காம் 2.0' திட்டத்தின்படி, அடிப்படை நிலை ஆய்வாளர்கள் மற்றும் ஆபரேட்டர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை 1,000 டாலரில் இருந்து முற்றிலும் ரத்து செய்யப்படும் அல்லது குறைக்கப்படும்.
அதே சமயம், மிக உயரிய பயிற்சி பெற்ற விரல் விட்டு எண்ணக்கூடிய 'மாஸ்டர்' நிலை வல்லுநர்களுக்கு மாதம் 3,500 டாலர் வரை ஊதியம் உயர்த்தப்பட உள்ளது.
திறமை மற்றும் தொழில்நுட்ப மேன்மைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் நியாயப்படுத்தினாலும், சுமார் 6,000 பணியாளர்கள் கொண்ட சைபர் கமாண்டில் பெரும்பான்மையான அடிப்படை நிலை ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படுவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகளின் சமாதானம்
ராணுவத்தில் வெடிக்கும் சர்ச்சை
கடந்த சில மாதங்களாகக் கடும் பணிச்சுமை மற்றும் தற்கொலைச் சம்பவங்களால் தவித்து வரும் சைபர் கமாண்ட் வீரர்கள் மத்தியில், இந்த ஊதியக் குறைப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்ப்பைத் தணிக்க ராணுவ உயர் அதிகாரிகள் தீவிர சமாதானக் குறிப்புகளைத் தயாரித்து வருகின்றனர்.
வீரர்கள் கூடுதல் பணிகளை மேற்கொள்வதன் மூலமோ அல்லது நிதி உதவித் திட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலமோ இதை ஈடுசெய்யலாம் என ராணுவ சைபர் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் கிறிஸ்டோபர் யூபாங்க் யோசனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இத்தகைய ஊதியக் குறைப்பு இளம் திறமையாளர்களை ராணுவத்திலிருந்து வெளியேற்றி, தனியார் நிறுவனங்களை நோக்கித் தள்ளிவிடும் என்றும், இது தேசிய பாதுகாப்பிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் முன்னாள் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.