அமெரிக்க தமிழர்கள் ஆண்டிற்கு ஒருமுறையாவது தமிழகம் வரவேண்டும்; முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
அமெரிக்காவில் தமிழர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், முதலில் சான் பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்று பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து சிகாகோ சென்ற முதல்வர், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) சிகாகோவில் தமிழகர்களின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில், புலம்பெயர் தமிழர்களின் நலனுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் உரை
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தமிழர்களை ஆண்டிற்கு ஒருமுறையாவது தமிழகம் வாருங்கள் எனக் கூறினார். மேலும் இதுகுறித்து எக்ஸ் பக்கத்திலும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பது பின்வருமாறு:- இமைநேரத்தில் கண்டங்களைக் கடந்துவிட்ட உணர்வு! சிகாகோ நகரில் வெள்ளமெனத் தமிழர் திரண்ட காட்சியில், தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றைக் கண்டேன். கற்ற கல்வியால் - ஒப்பற்ற உழைப்பால் பெற்ற பெருமைகளைத் தாங்கி, அமெரிக்க மண்ணில் தமிழர் தலைநிமிர்ந்து வாழ்தல் கண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக - திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன். புலம்பெயர்ந்து புலர்ந்தெழுந்த தமிழர்களின் நல்வாழ்வு நாளும் சிறக்க என் வாழ்த்துகளைச் சொல்லி - அமெரிக்கப் பயணத்தின் குறிப்புகளில் பொறிக்க அவர்களது மகிழ்ச்சியை என் நெஞ்சிலேந்தினேன்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.