இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத உயிர்களை காவு வாங்கும் -ரஷ்ய அதிபர் புதின்
பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால், ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு மனித உயிரிழப்புகள் ஏற்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். "குடியிருப்பு பகுதிகளில் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவது பல சிக்கலான அதே சமயம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புடின் பேசினார். "ரத்தம் சிந்தப்படுவதை நிறுத்துவது இப்போது மிக முக்கிய விஷயமாகும். அனைத்து ஆக்கபூர்வமான நாடுகளுடன் ரஷ்யா இணைந்து பணியாற்றத் தயார்" எனவும் அதிபர் புடின் அறிவித்தார். ரஷ்யா கடந்தாண்டு உக்ரைனுக்கு எதிராக தொடங்கிய 'ராணுவ நடவடிக்கையில்', குடியிருப்பு பகுதிகளில் வீசப்பட்ட குண்டுகளால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரத்தம் சிந்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்-புடின்
சிரியாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ரஷ்யா எச்சரிக்கை
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாசின் திடீர் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் தனது பதிலடியை தொடங்கியது. இந்த பதிலடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிரியாவிலிருந்து ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதங்கள் செல்வதாக கூறி, சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ விமான நிலையங்களை இஸ்ரேல் குண்டு வீசி தகர்த்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு எதிராக ரஷ்யா தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம், இஸ்ரேலின் இந்த செயல், சிரியாவின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை மீறும் நடவடிக்கை என கூறியது. மேலும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதிகளில் மோதல்களைத் தூண்டும் எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.