Page Loader
அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு
கொலராடோவில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது குறிவைக்கப்பட்ட தாக்குதல்

அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு

எழுதியவர் Venkatalakshmi V
திருத்தியவர் Sekar Chinnappan
Jun 02, 2025
10:05 am

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவு கூர கூடியிருந்த மக்கள் குழு மீது ஒரு நபர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர், கூடியிருந்த கூட்டத்தினர் மீது மொலோடோவ் காக்டெய்ல்களை வீசியும், தீப்பந்தங்களை எறிந்தும் தாக்குதல் நடத்தினார். இதில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்தனர். முகமது சப்ரி சோலிமான் என அடையாளம் காணப்பட்ட தாக்குதல் ஆசாமி, கூட்டத்தைத் தாக்கும் போது "பாலஸ்தீனத்தை விடுவிப்போம்" என்று கூச்சலிட்டார். அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கொலராடோவின் போல்டரில், காசாவில் இன்னும் பணயக்கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்ட ஒரு நடைப்பயணத்திற்கு அருகில் இந்த தாக்குதல் நடந்தது.

காஷ் படேல்

இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என காஷ் படேல் தகவல்

கொலராடோ சம்பவத்தை இலக்கு வைக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்று எஃப்பிஐ (FBI) இயக்குனர் காஷ் படேல் கூறியுள்ளார். அவர் மேலும், "கொலராடோவின் போல்டரில் நடந்த ஒரு இலக்கு வைக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம், முழுமையாக விசாரித்து வருகிறோம். எங்கள் ஏஜென்ட்களும் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளும் ஏற்கனவே சம்பவ இடத்தில் உள்ளனர், மேலும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது அவை வெளியிடப்படும்." என்று சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். வாஷிங்டனில் இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்களான யாரோன் லிஷின்ஸ்கி மற்றும் சாரா மில்கிரிம் ஆகியோரை சிகாகோ நபர் சுட்டுக் கொன்ற சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.