ட்விட்டருக்கே தான் ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கும் தாலிபான் தலைவர்
ட்விட்டரா? த்ரெட்ஸா? என சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் முதல் நெட்டிசன்களிடையே விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஆப்கானில் அதிகாரம் மிக்க தலைவராக வலம் வரும், அனஸ் ஹக்கானி, தான் ட்விட்டருக்கே ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய கருத்தை ட்விட்டர் பதிவாக, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் அவர். அந்தப் பதிவில், "பிற சமூக வலைத்தளங்களில் இல்லாத இரண்டு நன்மைகள், ட்விட்டரில் இருக்கின்றன. ஒன்று, கருத்து சுதந்திரம், மற்றொன்று நம்பகத்தன்மை. மெட்டாவைப் போன்ற சகிப்பதன்மையில்லாக் கொள்கைகள், ட்விட்டரில் இல்லை. எனவே, பிற சமூக வலைத்தளங்களால் ட்விட்டருக்கு மாற்றாக தடம் பதிக்க முடியாது" எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஹக்கானியின் இந்த ட்விட்டர் பதிவு இதுவரை இரண்டு மில்லயின் ட்விட்டர் பயனர்களால் பார்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.