ஆப்கானிஸ்தான்: 'அறநெறியற்ற' இசைக்கருவிகளை தீயிலிட்டு எரித்த தாலிபான்கள்
இசை கருவிகள் அறநெறியை சீர்குலைக்கிறது என்று கூறி தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இசைக்கருவிகளை தீயிலிட்டு எரித்துள்ளனர். சனிக்கிழமையன்று, ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் வைத்து ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இசைக்கருவிகளை தீயிலிட்டு அவர்கள் எரித்தனர். 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்ததில் இருந்து, பொது இடங்களில் இசையை கேட்பது உட்பட பல கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துள்ளனர். இந்நிலையில், கிடார், ஹார்மோனியம், தபேலா, ஒலி பெருக்கிகள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற பல இசை தொடர்பான பொருட்களை அவர்கள் தீயிலிட்டு எரித்ததாக செய்திகள் கூறுகின்றன. இந்த பொருட்கள் அனைத்தும் திருமண நிகழ்வுகளில் இருந்து கைப்பற்றப்பட்டதாகும்.
ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்படும் இசைக் கலைஞர்கள்
இதற்குமுன், 90களின் நடுப்பகுதியில் இருந்து 2001 வரை ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்திருக்கின்றனர். அப்போது, சமூகக் கூட்டங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி உட்பட அனைத்து வகையான இசையும் அந்த நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தது. 2001க்கு பிறகு, தடைகள் எதுவும் இல்லாமல் இசை செழித்தோங்கியது. ஆனால், 2021ஆம் ஆண்டில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, பல இசைக்கலைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அது போக, ஆப்கானிஸ்தானில் மிஞ்சி இருக்கும் பாடகர்களும் இசைக்கலைஞர்களும் தற்போது வரை துன்புறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இது போன்ற செயல்கள் "கலாச்சார இனப்படுகொலை" என்று ஆப்கானிஸ்தான் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மியூசிக் நிறுவனர் அஹ்மத் சர்மாஸ்ட் தெரிவித்துள்ளார்.