இதுக்கெல்லாமா பணி நீக்கம்! வேலைக்கு அதிக சீக்கிரம் வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
செய்தி முன்னோட்டம்
ஸ்பெயினில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 22 வயதுப் பெண் ஊழியர் ஒருவர், தனது வேலை நேரம் தொடங்குவதற்கு மிக முன்னதாகவே திரும்பத் திரும்ப அலுவலகம் வந்ததால், பணியிலிருந்து நீக்கப்பட்டு சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது, வேலையில் ஆர்வம் காட்டுவதா அல்லது விதிமுறைகளை மீறுவதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட அந்தப் பெண் ஊழியரின் அதிகாரப்பூர்வ வேலை நேரம் காலை 7:30 மணியாக இருந்தாலும், அவர் தொடர்ந்து காலை 6:45 மணிக்கே அலுவலகம் வந்துள்ளார். இது குறித்து ஒரு வருடத்திற்கும் மேலாக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அவர் தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ள மறுத்துள்ளார்.
ஒழுங்கீனமின்மை
ஒழுங்கீனமின்மையை காரணம் காட்டி நடவடிக்கை
நிறுவனத்தின் நிர்வாகம், அவர் சீக்கிரம் வருவதால் எந்த வேலையும் செய்யவில்லை என்பதையும், அந்த நேரத்தில் அவருக்கு எந்தக் கடமைகளும் ஒதுக்கப்படவில்லை என்பதையும் தெளிவாக உணர்த்தியது. இருந்தும் அவர் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற மறுத்ததால், அவரது நடத்தையை நிறுவனம் 'தீவிர ஒழுங்கீனமின்மை' என்று வகைப்படுத்தி, இறுதியில் அவரைப் பணி நீக்கம் செய்தது. இது அதிக ஆர்வத்தை விட, விதிமுறைகளைப் புறக்கணிக்கும் எதிர்ப்பின் செயல் என்று நிர்வாகம் வாதிட்டது.
நீதிமன்றம்
நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
நிறுவனத்தின் முடிவால் அதிருப்தி அடைந்த அந்தப் பெண், அலிகாண்டே சமூக நீதிமன்றத்தில் தனது பணி நீக்கத்தை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். ஆனால், நீதிமன்றம் நிறுவனத்தின் முடிவை உறுதி செய்தது. நீதிமன்றம் தனது தீர்ப்பில், இந்தப் பிரச்சனையானது அதிக சீக்கிரம் வருவது பற்றியது அல்ல என்றும், மாறாகப் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், பணியிட விதிமுறைகளைப் பின்பற்ற மறுத்தது பற்றியது என்றும் அழுத்தமாகக் கூறியது. அந்நாட்டு தொழிலாளர்கள் சட்டத்தின் பிரிவு 54 இன் கீழ் வரும் விதிமுறைகளை மீறியது என்ற காரணத்திற்காகப் பணி நீக்கம் சரியே என்றும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அந்தப் பெண் ஊழியர் இன்னும் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.