தென் கொரியாவில், கனமழை, வெள்ளம்: 33 பேர் பலி
தென் கொரியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அரசாங்க தரவுகளின்படி, இந்த பயங்கர வெள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், டஜன் கணக்கானவர்களை காணவில்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. கனமழையால் சாலைகள், விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளும் சேதமடைந்துள்ளன. வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வட கியோங்சாங் மாகாணத்தில் மட்டும் 16 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று தென் கொரியாவின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
27,260 வீடுகளுக்கு மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது
ஞாயிற்றுக்கிழமை, சியோங்ஜு நகரின் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல் ஒரு சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்டது. இதுவரை சுமார் 6,100 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், 4,200 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கனமழையால் 27,260 வீடுகளுக்கு மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், நேற்று, 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 200 சாலைகளும் மூடப்பட்டுள்ளது. சில புல்லட் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் தென் கொரியாவின் வழக்கமான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 9 முதல், தென் கொரியாவின் மத்தியப் பகுதிகளில் இருக்கும் கோங்ஜு நகரம் மற்றும் சியோங்யாங் கவுண்டியில் 600மிமீக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.