ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்குதல்
செய்தி முன்னோட்டம்
வடக்கு பசிபிக் கடலில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானில் மூன்று சிறிய சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. ஜப்பானின் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) மாலை 5 மணி அளவில் இவாடே மாகாணத்தின் கடலோரப் பகுதியை ஒட்டி 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில், இவாடே கடற்கரைக்குப் புதிய சுனாமி எச்சரிக்கைகளை அதிகாரிகள் விடுத்தனர். முதல் சுனாமி அலை மியாகோவை 5:37 மணிக்குத் தாக்கியது.
சுனாமி அலைகள்
அடுத்தடுத்து சுனாமி அலைகள்
அதைத் தொடர்ந்து இரண்டு நிமிடங்களில், ஒஃபனாடோ நகரை 10 சென்டிமீட்டர் உயரச் சுனாமி அலை தாக்கியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது. பின்னர், குஜி கடலோரப் பகுதியில் 20 சென்டிமீட்டர் உயர சுனாமி அலை தாக்கியது. கடற்கரைப் பகுதிகளில் சுனாமி அலைகள் 1 மீட்டர் உயரம் வரை எழக்கூடும் என்று JMA எச்சரிக்கை விடுத்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சில மணிநேரங்களுக்குப் பின்னரும் சுனாமி அலைகள் மீண்டும் மீண்டும் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலநடுக்கத்திற்குப் பிறகு 5.3 முதல் 6.3 ரிக்டர் அளவில் பின் அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.
பாதிப்புகள்
எந்தவித பாதிப்புகளும் பதிவாகவில்லை
உடனடியாக எந்தவொரு உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்றும், நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள இரண்டு அணுமின் நிலையங்களிலும் அசாதாரண நிகழ்வுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இப்பகுதியில் புல்லட் ரயில்களின் சேவை தற்காலிகமாகத் தாமதமானது. உலகின் மிகவும் டெக்டோனிக் செயல்பாட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஜப்பான், ஆண்டுதோறும் சுமார் 1,500 நில அதிர்வுகளை எதிர்கொள்கிறது. 2011 மார்ச் மாதம் இதே பகுதியில் தான் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி தாக்கியது குறிப்பிடத்தக்கது.