ஈரானின் 'அண்டர்கிரவுண்ட்' ரகசியம்! அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி அணுசக்தி மையங்களை நிலத்துக்குள் புதைக்கும் ஈரான்
செய்தி முன்னோட்டம்
வாஷிங்டனை சேர்ந்த 'அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம்' வெளியிட்டுள்ள புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள், ஈரான் தனது அணுசக்தி உள்கட்டமைப்புகளை கான்கிரீட் மற்றும் மண்ணால் மூடி அதிநவீன பன்கர்களாக மாற்றி வருவதை உறுதி செய்துள்ளன. அமெரிக்காவுடனான ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், ஈரான் தனது பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த புகைப்படத்தில், தேஹ்ரானில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பார்ச்சின் வளாகத்தில், 'Taleghan 2' என்ற புதிய கட்டிடம் கான்கிரீட் உறைகளால் மூடப்பட்டு, அதன் மேல் மண் கொட்டப்பட்டு வருகிறது. "இந்த மையம் விரைவில் அடையாளம் காண முடியாத ஒரு நிலத்தடி பன்கராக மாறிவிடும். இது வான்வழித் தாக்குதல்களில் இருந்து பெரும் பாதுகாப்பை வழங்கும்," என எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு
தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க அரண்
நடன்ஸ்: இங்குள்ள மலைகளுக்குக் கீழே செல்லும் சுரங்க பாதைகளின் நுழைவாயில்கள் கான்கிரீட் மற்றும் கூடுதல் பாறை அடுக்குகளால் பலப்படுத்தப்படுகின்றன. இது வெடிகுண்டுத் தாக்குதல்களின் அதிர்வுகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்பஹான்: ஏற்கனவே அமெரிக்காவால் குறிவைக்கப்பட்ட இந்த மையத்தில், சுரங்க நுழைவாயில்களை மறைப்பதற்கான முயற்சிகள் பிப்ரவரி 8 முதல் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை முதல், கைவிடப்பட்ட விமான எதிர்ப்பு பீரங்கி தளங்களை ஈரான் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. பார்ச்சின் மற்றும் பிற முக்கிய மையங்களை சுற்றி புதிய வான் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரானின் இந்த நகர்வுகள் அங்கு ரகசியமாக 'யுரேனியம் செறிவூட்டல்' அல்லது அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான பணிகள் நடக்கின்றனவா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.