ரஷ்ய அதிபர் புடின் இன்று மாலை இந்தியா வருகிறார்: அட்டவணை மற்றும் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும்
செய்தி முன்னோட்டம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று இந்தியாவுக்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்கிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான பாரம்பரிய உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் இந்த விஜயம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தின் மூலமாக, இரு நாடுகளுக்கிடையே சுமார் 10 முக்கிய ஒப்பந்தங்களும், 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் (MoUs) கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை பலப்படுத்தும் பல முக்கிய அம்சங்கள் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பிடிக்கும். ரஷ்ய அதிபர் புடின் இன்று, வியாழக்கிழமை மாலை 4:30 மணியளவில் புது டெல்லியில் தரையிறங்குவார். இதற்காக தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சி நிரல்
புடினின் 24 மணி நேர நிகழ்ச்சி நிரல்
ரஷ்ய அதிபரை வரவேற்க டெல்லி விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு ஒரு தனிப்பட்ட இரவு விருந்தை வழங்குவார். கடந்த ஆண்டு பிரதமர் மாஸ்கோவிற்கு விஜயம் செய்தபோது புடின் மோடிக்கு இரவு விருந்து அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடிக்கும் புடினுக்கும் இடையிலான வருடாந்திர இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு டிசம்பர் 5 வெள்ளிக்கிழமை நடைபெறும். உக்ரைன் படையெடுப்பிற்கு பிறகு புடினின் முதல் இந்திய வருகை இதுவாகும். பேச்சுவார்த்தைக்கு முன் ரஷ்ய ஜனாதிபதிக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடைபெறும் இடமான ஹைதராபாத் மாளிகையில் புடின் மற்றும் அவரது குழுவினருக்கு பிரதமர் மோடி மதிய உணவு விருந்தை வழங்குவார்.