
40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரஷ்ய விமானம் நடுவானில் மாயம்; தேடுதல் நடவடிக்கை தீவிரம்
செய்தி முன்னோட்டம்
ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 50 நபர்களை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக விரிவான தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. சைபீரியாவை தளமாகக் கொண்டு செயல்படும் அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அன்டோனோவ் An-24 எனும் இந்த விமானம், தனது பயணத்தின் போது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பை இழந்ததாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். சீன நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா நகரத்தை விமானம் நெருங்கிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
தொடர்பு இழப்பு
நடுவானில் ரேடாரில் இருந்து தொடர்பு இழப்பு
பயணத்தின் நடுவில் விமானம் ரேடாரில் இருந்து மறைந்துவிட்டது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பிராந்திய ஆளுநர் வாசிலி ஓர்லோவ் டெலிகிராம் மூலம் இதுகுறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். முதற்கட்ட அறிக்கைகள் விமானத்தில் ஐந்து குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் இருந்ததாகக் குறிப்பிட்டனர். இதற்கு நேர்மாறாக, உள்ளூர் அவசரகால அமைச்சகம், விமானத்தில் சுமார் 40 பேர் இருந்ததாக நம்பப்படுவதாகக் கூறியது. விமானத்தைத் தேடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று ஓர்லோவ் குறிப்பிட்டார். தற்போது வரை, விமானம் மற்றும் அதில் இருந்தவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. விமானம் கடைசியாக அறியப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள பகுதியை தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் தீவிரமாகச் சுற்றி வருகின்றன.