LOADING...
உக்ரைனின் ரயில் நிலையம் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்; 30 பேர் காயம்
உக்ரைனின் ரயில் நிலையம் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்

உக்ரைனின் ரயில் நிலையம் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்; 30 பேர் காயம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 04, 2025
04:15 pm

செய்தி முன்னோட்டம்

உக்ரைனின் சுமி பிராந்தியத்தில் உள்ள ஷோஸ்ட்கா ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சுமி பிராந்தியத்தில் உள்ள ஷோஸ்ட்கா ரயில் நிலையம் மீது நடத்தப்பட்ட கொடூரமான ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதல். அனைத்து அவசரகால சேவைகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றன. காயமடைந்தவர்கள் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆரம்ப அறிக்கைகளின்படி, ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகளும் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்துள்ளனர்." என்று குறிப்பிட்டார்.

தாக்குதல்

பிராந்திய ஆளுநர் தாக்குதலை உறுதிபடுத்தினார்

பிராந்திய ஆளுநர் ஓலே ஹ்ரைகோரோவ், தலைநகர் கீவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலும் இந்தத் தாக்குதலில் சிக்கியதை உறுதிப்படுத்தினார். சம்பவ இடத்தில் மருத்துவ மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் ஹ்ரைகோரோவ் பகிர்ந்த புகைப்படங்களில், தாக்குதலுக்குப் பிறகு ஒரு பயணிகள் பெட்டி தீப்பிடித்து எரிவது தெளிவாகத் தெரிகிறது. சமீப காலமாக உக்ரைனின் முக்கிய ரயில்வே நெட்வொர்க் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களுடைய போக்குவரத்து உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.