LOADING...
ஒலியை விட 10 மடங்கு வேகம்! 'ஒரேஷ்னிக்' ஏவுகணையால் உக்ரைனை நிலைகுலையச் செய்த ரஷ்யா
'ஒரேஷ்னிக்' ஏவுகணையால் உக்ரைனை நிலைகுலையச் செய்த ரஷ்யா

ஒலியை விட 10 மடங்கு வேகம்! 'ஒரேஷ்னிக்' ஏவுகணையால் உக்ரைனை நிலைகுலையச் செய்த ரஷ்யா

எழுதியவர் Venkatalakshmi V
Jan 09, 2026
02:30 pm

செய்தி முன்னோட்டம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இல்லம் மீது உக்ரைன் நடத்தியதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக, உக்ரைனின் மூலோபாய இலக்குகள் மீது அதிநவீன 'ஒரேஷ்னிக்' (Oreshnik) ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. ஜனவரி 9 அதிகாலை முதல் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்ய மொழியில் 'ஹேசல்நட் மரம்' என்று பொருள்படும் இந்த ஒரேஷ்னிக் ஏவுகணைகள், ஒலியை விட 10 மடங்கு வேகத்தில்(மணிக்கு சுமார் 13,000 கி.மீ) செல்லக்கூடியவை. இவை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை என்பதோடு, ஐரோப்பாவின் எந்தப் பகுதியையும் தாக்கும் வல்லமை கொண்டவை.

பழிவாங்கும் நடவடிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா பழிவாங்கும் நடவடிக்கையாக தாக்குதல் நடத்தியுள்ளது

தற்போது உக்ரைனிடம் இத்தகைய அதிவேக ஏவுகணைகளைத் தடுக்கும் தொழில்நுட்பம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கிவ் மற்றும் மேற்கு நகரமான எல்விவ் (Lviv) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட முக்கியக் கட்டமைப்புகள் சேதமடைந்ததில் மூவர் உயிரிழந்தனர் மற்றும் 16-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த மாதம் புடினின் இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் 91 ட்ரோன்களை ஏவியதாக ரஷ்யா குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்து, இது ஒரு புனையப்பட்ட கதை என்று விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில் ரஷ்யாவின் இந்த அதிரடி தாக்குதலால் போர்ச் சூழல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

Advertisement