
எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக தயாரிக்க ரஷ்யா முன்மொழிவு என தகவல்
செய்தி முன்னோட்டம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, அடுத்த தலைமுறை எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக உற்பத்தி செய்வதற்கான புரபோசலை ரஷ்யா முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது இந்தியா இலக்கு வைத்த வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிப்பதில் எஸ் 400 அமைப்பு முக்கிய பங்கு வகித்ததாக கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ரஷ்யாவின் இந்த திட்டம் இந்தியாவுடனான தொடர்ச்சியான மூலோபாய கூட்டாண்மையின் வெளிப்பாடாக வருகிறது.
எனினும், இந்த தகவல் 2024லேயே ஒருமுறை பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எஸ் 500
எஸ் 500 அமைப்பின் சிறப்பம்சங்கள்
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், ஸ்டெல்த் விமானங்கள் மற்றும் குறைந்த சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களை நடுநிலையாக்கும் திறன் கொண்ட எஸ் 500 ஆனது எஸ் 400 ஐ விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கூறப்படுகிறது.
600 கிமீ வரை இடைமறிப்பு வரம்பு மற்றும் 200 கிமீ உயரக் கவரேஜ் கொண்ட எஸ் 500 அமைப்பில் 77N6-N மற்றும் 77N6-N1 இடைமறிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அருகிலுள்ள இடத்திலும் அழிக்க உதவுகிறது.
இது 2,000 கிமீ வரை கண்டறிதல் வரம்பைக் கொண்ட மேம்பட்ட AESA ரேடார் அமைப்பை பயன்படுத்துகிறது.
கூட்டு தயாரிப்பு
இந்தியாவின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் கூட்டு தயாரிப்பு
ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்த கூட்டு தயாரிப்பு ஒப்பந்தம் இந்தியாவின் மூலோபாய தடுப்பு திறன்களை மேலும் அதிகரிக்கும் மற்றும் அதன் அடுக்கு வான் பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்தும்.
எஸ் 500 அமெரிக்க THAAD அமைப்பைக் கூட மிஞ்சும் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர், இது வான் பாதுகாப்பு, ஏவுகணை இடைமறிப்பு மற்றும் செயற்கைக்கோள் எதிர்ப்பு திறன்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது.
நெருங்கிய ராணுவ உறவைக் கொண்டுள்ள இந்தியா மற்றும் ரஷ்யா ஏற்கனவே பிரமோஸ் ஏவுகணைகளை கூட்டாக தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING : Russia offers joint production of #S500 system to India. pic.twitter.com/pC96TgzX5y
— IDU (@defencealerts) May 12, 2025