மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
செய்தி முன்னோட்டம்
சீனாவில் மீண்டும் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. ஓமிக்ரானின் மாறுபாடான பிஎப்7 வைரஸ் தான் இந்த பரவலுக்கு காரணம் என்றும்,
இந்த வைரஸ் மிக வேகமாக பரவ கூடிய தன்மை கொண்டது என்றும் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இது சீனாவில் மட்டுமல்லாது கிழக்கு ஆசிய நாடுகளிலும் அதிவேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவிலும் இந்த புதுவித கொரோனா தொற்றால் இதுவரை 4 பேர் பாதிப்பு அடைந்துள்ளார்கள்.
அதனால் பரவலை தவிர்க்க மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு ஏற்கனவே விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை செயல்பட்டு வரும் நிலையில் தற்போது மத்திய சுகாதாரத்துறை மேலும் ஓர் புது கட்டுப்பாட்டினை அறிவித்துள்ளது.
72 மணி நேரத்திற்கு முன் பரிசோதனை செய்திருக்க வேண்டும்
ஜனவரி 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் கட்டுப்பாடு - நெகட்டிவ் ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் கட்டாயம்
அதன்படி, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய 6 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு நெகட்டிவ் ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் கட்டாயம் என்றும்,
பயணத்திற்கு முன் பயணிகள் தாங்கள் பரிசோதனை செய்த அறிக்கையை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான, மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த கட்டுபாடானது ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்த பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.