26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதில் சிக்கல்?
26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதை நாடு கடத்த, இந்தியாவின் கோரிக்கை கிடைக்கப்பெற்றதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், அது தொடர்பான ஒப்பந்தம் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹபீஸ் சயீதை பண மோசடி வழக்கில் நாடு கடத்த கோரும் இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் அலுவலர்கள் பெற்றனர். ஆனால், இது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எந்த விதமான ஒப்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது" என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு வழக்குகளுக்காக தேடப்படும் ஹபீஸ் சயீத்
முன்னதாக, வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, பாகிஸ்தானிடம் ஹபீஸ் சயீதை நாடு கடத்துவதற்கான கோரிக்கையை வைத்துள்ளதாக தெரிவித்தார். "கேள்விக்குரிய நபர்(ஹபீஸ் சயீத்)இந்தியாவில் பல வழக்குகளில் தேடப்படும் நபராக உள்ளார். அவர் ஐநாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதியும் கூட. இது சம்பந்தமாக, ஒரு குறிப்பிட்ட வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு பாகிஸ்தான் அரசிடம் உரிய ஆதாரங்களுடன் கோரிக்கையை வைத்துள்ளோம்" என கூறினார். மேலும், அவரது நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தானிடம் தெரிவித்து வருவதாக பேசிய பாக்சி, இது சமீபத்திய கோரிக்கை எனவும், பத்திரிகையாளர் சந்திப்பில் விவரித்தார்.
தேர்தலில் போட்டியிடும் ஹபீஸ் சயீத் கட்சி
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனரான சயீத், ஐநாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இவர், இந்தியாவில் பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். ஜூலை 17 2019 முதல் வேறு குற்றங்களுக்காக சிறையில் உள்ள சயீதுக்கு, லாகூர் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தால் ஏப்ரல் 2022ல், தீவிரவாதத்திற்கு நிதியளித்த குற்றத்திற்காக 33 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சமீபத்திய சர்ச்சைக்குரிய நடவடிக்கையாக, அடுத்தாண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தேர்தலில் சையீத்தின், பாகிஸ்தான் மார்க்கசி முஸ்லிம் லீக் கட்சி, தேசிய மற்றும் மாகாண தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. ஹபீஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீதும் லாகூரில் உள்ள தேசிய சட்டமன்றத் தொகுதியான என்ஏ-127 தொகுதியில் போட்டியிட உள்ளார்.