"இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா!
கடந்த சில ஆண்டுகளாகவே, இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே ஒரு பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இந்திய-சீன எல்லைகளில் திடீர் திடீர் என்று மோதல்களும் அத்துமீறல்களும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. முக்கியமாக, 2020ஆம் ஆண்டு கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு நிலைமை இன்னும் மோசமானது. கடந்த டிசம்பர் 9ஆம் தேதி கூட இது போன்ற ஒரு சம்பவம் அருணாச்சல் மாநிலத்தில் நடந்தது. இப்படியே ஒரு முடிவில்லாமல் இந்த சூழல் தொடர்ந்து கொண்டிருக்க, இந்த பிரச்சனைக் குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டிசம்பர் 20ஆம் தேதி இருநாட்டு ராணுவ தளபதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்போது இந்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவுடன் நல்லுறவு!
தவாங் பகுதி பிரச்சனை முடிந்து சில வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், "இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த நாங்கள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், "தூதரகம் மற்றும் ராணுவம் மூலமாக இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்திய-சீன எல்லையில் அமைதி நிலைநாட்டபடும் என்று இரு நாடுகளும் உறுதி எடுத்துள்ளது" என்று அவர் கூறி இருக்கிறார். இது தொடர்பாக, வெளியுறவுத் துறை அமைச்சகம், "தற்காலிகமாக மேற்கு பகுதியில் பாதுகாப்பை நிலைநாட்ட இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டோம். மற்ற பிரச்சனைகளுக்கு பரஸ்பரமான முடிவுகள் விரைவில் எடுக்கப்படும்" என்று கூறியுள்ளது.