உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளார். ராகுல் காந்தி, பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைகளை அடிக்கடி விமர்சித்து வரும் ஒரு முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஆவார். இந்நிலையில், ரஷ்ய-உக்ரைன் போரில் மத்திய அரசின் நிலைப்பாட்டை அவர் ஆதரித்திருப்பது மிக முக்கியமான ஒரு கருத்தாக பார்க்கப்படுகிறது. மோடி குடும்பபெயர் குறித்து தவறாக பேசிய விவகாரத்தில் ராகுல் காந்தியின் எம்பி பதவி சமீபத்தில் பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பல்வேறு பிரச்சனைகளுக்கும் வேறுபாடுகளுக்கும் மத்தியில், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர், "எங்கள் நலனையும் நாங்கள் கவனிக்க வேண்டும்" என்று உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
எனது கருத்தும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஒத்திருக்கும்: ராகுல் காந்தி
வாஷிங்டனின் நேஷனல் பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, "நாங்கள் ரஷ்யாவுடன் நல்லுறவு வைத்திருக்கிறோம். எப்போதும் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நல்லுறவு இருந்திருக்கிறது. நாங்கள் அவர்களைச் சார்ந்து இருக்கிறோம். எனவே, எனது கருத்தும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஒத்த கருத்தாகத் தான் இருக்கும். என்ன இருந்தாலும் நாம் கடைசியில், நம் நலன்களையும் கவனிக்க வேண்டும் இல்லையா." என்று கூறியுள்ளார். மேலும், அவர், "இந்தியாவின் அளவு பெரிதாக இருப்பதால், அது எப்போதும் பரந்த அளவிலான நாடுகளுடன் உறவுகளைக் கொண்டிருக்கும். சில நாடுகளுடன் சிறந்த உறவுகளை வைத்திருப்போம். மற்ற நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த முயற்சிப்போம். ஆனால், இந்த நாட்டுடன் இந்தியா உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுவது இந்தியாவுக்கு கடினமாக உள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.