'நீரவ் மோடியை நாடுகடத்தாததால் இந்தியாவிற்கு பிரிட்டன் மீது கோபம்': பிரிட்டன் முன்னாள் உள்துறை அமைச்சர்
செய்தி முன்னோட்டம்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் $2 பில்லியன் மதிப்பிலான கடன் மோசடி செய்து பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற நீரவ் மோடியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, சட்டவிரோதமாக பிரிட்டனில் தங்கியிருக்கும் இந்தியர்களை திரும்ப ஏற்றுக்கொள்ள இந்தியா தயக்கம் காட்டியதாக பிரிட்டனின் முன்னாள் உள்துறை அமைச்சர் ப்ரீதி படேல் தெரிவித்துள்ளார். தி டெய்லி டெலிகிராஃப்' வெளியிட்டுள்ள பாட்காஸ்ட் தொடரில் பேசிய ப்ரீதி படேல், நீரவ் மோடியை ஒப்படைப்பதில் ஏற்பட்ட சட்டரீதியான தாமதங்கள் காரணமாக இந்திய அரசு கடும் கோபத்தில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 2021-இல் தாமே நீரவ் மோடியின் ஒப்படைப்பு உத்தரவில் கையெழுத்திட்ட போதிலும், அவர் இன்னும் பிரிட்டனில் இருப்பது தமக்கு மிகவும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
பின்னடைவு
குடியேற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவு
தான் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் (2019-2022), விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து செல்ல இந்திய அரசை ஒப்புக்கொள்ள வைப்பது தமக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று ப்ரீதி படேல் நினைவு கூர்ந்துள்ளார்.
நீரவ் மோடி போன்ற உயர் மட்டக் குற்றவாளிகள் மீது பிரிட்டன் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை, இந்த விவகாரத்தை ஒரு அழுத்தக் கருவியாக பயன்படுத்தி இந்தியா, பிரிட்டனின் கோரிக்கையை தள்ளிப்போட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டனம்
நீதி அமைப்பின் முறைகேடு எனக் கண்டனம்
தற்போது பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் நிழல் வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ப்ரீதி படேல், நீரவ் மோடி சட்டரீதியான வழிமுறைகள் மூலம் பிரிட்டனின் நீதி அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியச் சட்டங்களின்படி நீரவ் மோடி அந்நாட்டுச் சிறையில் இருக்க வேண்டியவர் என்றும், இவ்வளவு காலம் அவர் பிரிட்டனில் தங்கியிருப்பது பிரிட்டன் வரி செலுத்துவோருக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்றும் அவர் சாடியுள்ளார்.
லண்டனின் பென்டன்வில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீரவ் மோடி, தனது ஒப்படைப்புக்கு எதிராகப் பலமுறை தொடுத்த மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்திலும் நிவாரணம் கிடைக்காததால் விரைவில் இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.