பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவின் இரண்டு முக்கியமான தளங்களை தாக்கியதாக ஈரான் அறிவித்தது. அதனை தொடர்ந்து, ஒரு அறிவிப்பை வெளியிட்ட பாகிஸ்தான், அந்த தாக்குதலால் இரண்டு குழந்தைகள் இறந்ததாகவும், மூன்று பெண்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவின் இரண்டு தளங்கள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் அழிக்கப்பட்டன என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை(IRGC) அறிவித்துள்ளது. "இந்த தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன" என்று ஈரானிய அரசு ஊடகம் விரிவாகக் கூறாமல் செய்தி வெளியிட்டுள்ளது.
"இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது": பாகிஸ்தான்
பாகிஸ்தானின் குஹே சப்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்தப்ட்ட ஜெய்ஷ் உல்-அட்லின் தளங்கள் தான் அந்த பயங்கரவாதக் குழுவின் மிகப்பெரிய தளங்கள் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, புதன்கிழமை அதிகாலை ஒரு அறிக்கையை வெளியிட்ட பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம், தூண்டுதல் எதுவும் இல்லாமல் ஈரான் தங்களது வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாகவும், இந்த அத்துமீறலை பாகிஸ்தான் கடுமையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் இரண்டு "அப்பாவி" குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும், மூன்று சிறுமிகள் காயமடைந்தனர் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது. மேலும் இந்த சம்பவம் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும், "கடுமையான விளைவுகளை" ஏற்படுத்தக்கூடியது என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.