LOADING...
சிந்து நதி நீர் ஒப்பந்த சர்ச்சை: இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க போவதாக பாகிஸ்தான் மிரட்டல்
இந்தியாவின் மீது போர் தொடுக்க போவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அச்சுறுத்தியுள்ளார்

சிந்து நதி நீர் ஒப்பந்த சர்ச்சை: இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க போவதாக பாகிஸ்தான் மிரட்டல்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 22, 2026
09:56 am

செய்தி முன்னோட்டம்

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்தியா அறிவித்ததை தொடர்ந்து, இந்தியாவின் மீது போர் தொடுக்க போவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளார். பாகிஸ்தானின் ஏஆர்ஒய் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் க்வாஜா ஆசிஃப், "தண்ணீர் என்பது எங்களது தேசிய பாதுகாப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். எங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக நாங்கள் உணரும் கணமே, நாங்கள் நிச்சயமாக இந்தியாவுக்கு எதிராகப் போருக்குச் செல்வோம்" என்று தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானுக்கான நீர் விநியோகத்தை இந்தியா அதிவேகமாக கட்டுப்படுத்த முயல்வதற்கான ஆதாரங்கள் கிடைத்தால் ராணுவ நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

பின்னணி

ஒப்பந்தம் முடக்கப்பட்டதற்கான பின்னணி

கடந்த 2025 ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. எல்லையோரப் பயங்கரவாதக் கட்டமைப்புகளைப் பாகிஸ்தான் முழுமையாக அழிக்கும் வரை இந்த ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைக்கு வராது என்பதில் இந்தியா தற்போதும் உறுதியாக உள்ளது. உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், சிந்து நதிப் படுகையின் 80 சதவீத நீர் பாகிஸ்தானின் விவசாயத் தேவைகளுக்காகப் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

நீர் மேலாண்மை

பாகிஸ்தானின் உள்நாட்டு நீர் மேலாண்மை தோல்வி

இந்தியா மீது 'தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்துகிறது' என்று க்வாஜா ஆசிஃப் குற்றம் சாட்டினாலும், கடந்த ஓராண்டில் எல்லையில் நடந்துள்ள நீரியல் மாற்றங்கள் குறித்துத் தன்னிடம் தற்போதைய தரவுகள் எதுவும் இல்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். உண்மையில், பாகிஸ்தானின் தவறான நீர் நிர்வாகத்தால் அந்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர், குறிப்பாக சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாண மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர். சிந்து மாகாணத்தின் நீர்ப்பாசன துறை தரவுகளின்படி, அங்குள்ள வடமேற்கு கால்வாய் 64.1% பற்றாக்குறையையும், தாது கால்வாய் 82% பற்றாக்குறையையும் சந்தித்துள்ளன. முக்கிய நீர் ஆதாரமான சுக்கூர் பேரேஜில் நீர்மட்டம் சரிந்து வருவதால், மாகாணங்களுக்கு இடையேயான நீர் பகிர்வுப் பிரச்சினையை தீர்க்க முடியாமல் பாகிஸ்தான் தடுமாறுகிறது

Advertisement