LOADING...
பாகிஸ்தானில் பயங்கரம்! ராணுவத்தினரை குறிவைத்து ஓடும் ரயிலில் வெடித்த கார் குண்டு; 24 பேர் உடல் சிதறி பலி
பாகிஸ்தான் குவெட்டா ரயில் நிலையம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு

பாகிஸ்தானில் பயங்கரம்! ராணுவத்தினரை குறிவைத்து ஓடும் ரயிலில் வெடித்த கார் குண்டு; 24 பேர் உடல் சிதறி பலி

எழுதியவர் Sekar Chinnappan
May 24, 2026
02:58 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே ஞாயிற்றுக்கிழமை (மே 24, 2026) நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் திடீர் வெடிவிபத்தில் மேலும் 50க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்து உள்ளதால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றமும் பீதியும் நிலவி வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், காவல்துறையினர் மற்றும் ராணுவப் பாதுகாப்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கார் வெடிப்புத் தாக்குதல்

ராணுவ வீரர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கார் வெடிப்புத் தாக்குதல்

குவெட்டாவில் உள்ள சமன் படக் ரயில் நிலையம் அருகே ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று திடீரென ஓடும் ரயிலின் ஒரு பெட்டி மீது மோதி வெடித்ததால் இந்த மாபெரும் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விடுமுறைக்காகப் பயணித்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைக் குறிவைத்தே இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்புப் படை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கட்டிடங்கள் தரைமட்டம்

ரயில் பெட்டிகள் சேதம் மற்றும் கட்டிடங்கள் தரைமட்டம்

இந்த பயங்கர குண்டுவெடிப்பின் தாக்கத்தால் ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டுத் தலைகீழாகக் கவிழ்ந்து தீப்பற்றி எரியத் தொடங்கின. மேலும் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்ததுடன், அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இக்கோர சம்பவத்தைத் தொடர்ந்து குவெட்டாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

பொறுப்பேற்பு

போராளிக்குழு பொறுப்பேற்பு மற்றும் எச்சரிக்கை

இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு அந்தப் பிராந்தியத்தில் தடைசெய்யப்பட்ட பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற தனி நாடு கேட்டு போராடும் அமைப்பு அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து பெஷாவர் நோக்கிச் செல்லவிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டுப் பாதுகாப்புப் படையினர் பலூசிஸ்தான் முழுவதும் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தடையின்றி நடப்பதற்காகப் பொதுமக்கள் யாரும் குண்டுவெடிப்பு நடந்த பகுதிக்கு அருகே வர வேண்டாம் என உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாபர் யூசுப்சாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement