'ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முக்கியப் பகுதி': அமெரிக்கத் தூதரின் பேச்சால் அலறிய பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தைச் மேற்கொண்டார். அப்போது ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் "முக்கியமான பகுதி" என அவர் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் அரசு தனது பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. அமெரிக்கத் தூதரின் இந்த உரையைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரக பொறுப்பாளரை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்துக் தனது கண்டன தூதுக் குறிப்பை வழங்கியது. செர்ஜியோ கோரின் இக்கூற்று "பொறுப்பற்றது மற்றும் உண்மையற்றது" எனக் குறிப்பிட்ட பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதி குறித்த சர்வதேச கொள்கைகளுக்கு மாறாக அமெரிக்க தூதர் பேசியிருப்பதாகக் குற்றம்சாட்டியது.
கூற்று
அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கூறியது என்ன?
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு சென்ற செர்ஜியோ கோர், முதலமைச்சர் உமர் அப்துல்லாவை சந்தித்துப் பேசினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு மிகமுக்கியமான பகுதி, இங்கு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அங்கு நிலவும் பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு, அமெரிக்க குடிமக்களுக்கான பயண ஆலோசனைக் கட்டுப்பாடுகளை பரிசீலிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
நிலைப்பாடு
இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு
ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) உட்பட அனைத்துப் பகுதிகளும் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதி என்பதில் இந்தியா எப்போதும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத் தரப்பில் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதும், இதில் மூன்றாம் நபரின் தலையீட்டிற்கு இடமில்லை என்பதும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.