பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ஷெபாஸ் ஷெரீஃப்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை PML-Nயின் மேலிட தலைவர் நவாஸ் ஷெரீப்பிடம் அளித்துள்ளார். இதனைதொடர்ந்து, PML-Nயின் புதியகட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக மே 28 அன்று லாகூரில் பொதுக்குழு கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. ஆரம்பத்தில், இந்த கூட்டத்தை மே 11 அன்று நடத்த அக்கட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால், அது தற்போது மாற்றப்பட்டுள்ளது. அவரது தலைமையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நவாஸ் ஷெரீப்பே கட்சித் தலைவராக தொடர வேண்டும் என்று PML-N இன் பஞ்சாப் பிரிவு கேட்டுக்கொண்டதாக ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.
நவாஸ் ஷெரீப் மீண்டும் கட்சியை வழிநடத்த கோரிக்கை
PML-N பஞ்சாப் கூட்டத்தின் போது, இந்த சவாலான காலகட்டத்தில் நவாஸ் ஷெரீப்பை மீண்டும் கட்சியை வழிநடத்த வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். 2018 இல் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நவாஸ் ஷெரீப் எந்த ஒரு பொதுப் பதவியையும் வகிக்க தகுதியற்றவர் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்(IHC) அவரை நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 12 ஆகிய தேதிகளில் அவென்ஃபீல்ட் மற்றும் அல்-அஜிசியா வழக்குகளில் இருந்து விடுவித்தது. பின்னர், அவர் 2024 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு NA-130 லாகூரில் இருந்து வெற்றி பெற்றார்.