உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 8ல் தேர்தலை அறிவித்தது
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சில மணி நேரங்களுக்கு பின்னர், வெள்ளிக்கிழமை இரவு அந்நாட்டின் தேர்தல் ஆணையம் பொது தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேர்தலுக்கான வேலைகள் இம்மாதம் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தேசிய மற்றும் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய நான்கு மாகாண சட்டசபைகளில், பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேர்தல் ஆணையம், நள்ளிரவில் தேர்தல் தேதி அறிவித்துள்ளது.
தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்
முன்னதாக லாகூர் உயர்நீதிமன்றம், அதிகார வர்க்கத்தினரை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அண்மையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டு இருந்தது. இது சர்ச்சையான நிலையில், தற்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கான தொகுதிகள் 342-ல் இருந்து, 336 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில், 60 தொகுதிகள் பெண்களுக்கும், 10 தொகுதிகள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருந்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவதற்காகவே, தேர்தல் காலமாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.