அடிபணிந்து பாகிஸ்தான் அரசு; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் ஏற்பு
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து, 12 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் ஷெபாஸ் ஷெரீஃப் அரசு ஜம்மு காஷ்மீர் கூட்டு அசாமி செயல் குழுவுடன் (JKJAAC) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவிய வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர இரு தரப்பினரும் இணங்கியதாக, பாகிஸ்தானின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் தாரிக் ஃபசல் சௌத்ரி சனிக்கிழமை (அக்டோபர் 4) அறிவித்தார். சௌத்ரி தனது எக்ஸ் பதிவில், "பேச்சுவார்த்தைக் குழு நடவடிக்கை குழுவுடன் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். அனைத்து சாலைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இது அமைதிக்குக் கிடைத்த வெற்றி." என்று குறிப்பிட்டுள்ளார்.
25 அம்சங்கள் ஏற்பு
38 கோரிக்கைகளில் 25 அம்சங்கள் ஏற்பு
இந்த ஒப்பந்தம், JKJAAC முன்வைத்த 38 அம்சக் கோரிக்கைகளில் இருந்து 25 அம்சங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களாக, வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்குச் சமமான பண இழப்பீடு வழங்குதல், 20 நாட்களுக்குள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குதல், வன்முறைச் சம்பவங்களை விசாரிக்க நீதித்துறை ஆணையம் அமைத்தல் ஆகியவை அடங்கும். மேலும், மின்சார அமைப்பை மேம்படுத்த 10 பில்லியன் ரூபாய் வழங்குதல் மற்றும் சுகாதார அட்டை முறையை விரைந்து செயல்படுத்துதல் போன்ற பொருளாதார சீர்திருத்தங்களையும் இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது. அமைச்சரவையின் அளவை 20 ஆகக் குறைத்தல் மற்றும் ஊழல் தடுப்பு அமைப்புகளை இணைத்தல் போன்ற நிர்வாகச் சீர்திருத்தங்களும் இதில் அடங்கும்.