பாகிஸ்தான் மீது திடீர் தாக்குதல்: ஈரான் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான்
நேற்று பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் தூதரை பாகிஸ்தான் வெளியேற்றியதுடன், ஈரானில் உள்ள தனது நாட்டு தூதரையும் நாட்டுக்கு திரும்ப வருமாறு பாகிஸ்தான்.வலியுறுத்தியுள்ளது. மேலும், ஈரான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே திட்டமிடப்பட்ட அனைத்து உயர்மட்ட பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர், ஈரானில் இருந்து தனது தூதரை திரும்ப பெற பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது என்றும், ஆனால், ஈரானுக்கான பாகிஸ்தான் தூதர் தற்போது ஒரு முக்கியாய் பயணம் மேற்கொண்டுள்ளதால் அவர் தற்போதைக்கு நாடு திரும்ப மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நேற்று நடந்த தாக்குதல்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவின் இரண்டு முக்கியமான தளங்களை தாக்கியதாக ஈரான் அறிவித்தது. அதனை தொடர்ந்து, ஒரு அறிவிப்பை வெளியிட்ட பாகிஸ்தான், அந்த தாக்குதலால் இரண்டு குழந்தைகள் இறந்ததாகவும், மூன்று பெண்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவின் இரண்டு தளங்கள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் அழிக்கப்பட்டன என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை(IRGC) அறிவித்துள்ளது. "இந்த தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன" என்று ஈரானிய அரசு ஊடகம் விரிவாகக் கூறாமல் செய்தி வெளியிட்டுள்ளது.