பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: மருந்து தட்டுப்பாடு; உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்
பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் அங்கு மருந்து தட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு அதிகம் நிலவி வருகிறது. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால் அங்கு நடைபெற இருந்த பல முக்கிய அறுவை சிகிச்சைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தியை ANI செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. பாகிஸ்தானில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், இறக்குமதி செய்த்துவதிலும் உள்நாட்டு உற்பத்தியிலும் மந்தம் நிலவி வருவதாக கூறப்படுகிறது. 95% மருந்து பொருட்கள் இந்தியா, சீனா உட்பட பிற நாடுகளில் இருந்தது இறக்குமதி செய்யப்படுவதால், அதற்கு வழியில்லாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது.
மயக்க மருந்துகள் பற்றாக்குறை
பாகிஸ்தான் வங்கி அமைப்பில் அமெரிக்க டாலர்கள் இல்லாததால், பெரும்பாலான மருந்து உற்பத்தியாளர்களின் இறக்குமதி பொருட்கள் கராச்சி துறைமுகத்தில் முடங்கியுள்ளன. மேலும், அதிகரித்து வரும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை மருந்து உற்பத்தி செலவை அதிகரித்துள்ளன. அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த அதீத மருத்துவ பற்றாக்குறையால், மிக முக்கியமான அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று ANI தெரிவித்துள்ளது. இதயம், புற்றுநோய் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான மயக்க மருந்துகள் இரண்டு வார பயன்பாட்டிற்கும் குறைவாகவே இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால், மருத்துவமனை மரணங்கள் அதிகரிக்கக்கூடும் என்றும் வேலை இழப்புகள் ஏற்படலாம் என்றும் பல்வேறு தரப்பினர் அஞ்சுகின்றனர்.