பாகிஸ்தான் அரசில் ராணுவத்தின் ஆதிக்கம்: பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை, ராஜதந்திர உறவுகள் மற்றும் அரசின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் அந்நாட்டு ராணுவத்திற்கு இருக்கும் தீவிர பங்களிப்பை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இவரது இந்த அறிக்கை பாகிஸ்தானின் ஹைபிரிட் ஆட்சி முறை குறித்த விவாதங்களை உலகளவில் மீண்டும் கிளப்பியுள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் அரசு இயங்கி வந்தாலும், நாட்டின் முக்கிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு முடிவுகளில் ராணுவத்தின் பிடியே பலமாக உள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரின் அதிகாரம் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆதிக்கம்
ராணுவத் தளபதி ஆசிம் முனீரின் ஆதிக்கம்
சிவில் நிர்வாகம் மற்றும் ராணுவக் தலைமை இணைந்து முடிவுகளை எடுக்கும் இம்முறையை "ஹைபிரிட் ஆட்சி முறை" எனக் குறிப்பிடும் கவாஜா ஆசிஃப், இது ராணுவ ஆட்சி அல்ல என நியாயப்படுத்தியுள்ளார்.
இந்தியா, ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளைத் தீர்மானிப்பதில் ராணுவமே பிரதானப் பங்கு வகிப்பதாகத் தெரிகிறது.
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா தனது பதவி காலத்தை நீட்டிக்க முயன்றதாகக் கவாஜா ஆசிஃப் முன்வைத்த குற்றச்சாட்டுகளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
2022 நவம்பரில் தனது பதவிக்காலத்தை 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை நீட்டிக்க பஜ்வா கோரியதாகவும், தவறினால் ராணுவச் சட்டத்தை அமல்படுத்த போவதாக அச்சுறுத்தியதாகவும் ஆசிஃப் குற்றம் சாட்டினார்.
வரலாற்றுப் பின்னணி
வரலாற்றுப் பின்னணியும் ஜனநாயகக் கேள்விகளும்
பதவி நீட்டிப்புக்கு பதிலாகத் தேர்தல்களில் உதவி செய்வதாக பஜ்வா அளித்த வாக்குறுதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் அரசியல் தலையீட்டை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
1947-இல் சுதந்திரம் அடைந்தது முதல் பாகிஸ்தானை நீண்டகாலம் ராணுவமே நேரடியாக ஆட்சி செய்துள்ளது.
தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவியில் இருந்தாலும், ராணுவத்தின் மறைமுக ஆதிக்கம் அந்நாட்டின் ஜனநாயக அமைப்பின் அதிகாரத்தை சுருக்கியுள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.