LOADING...
எல்லாத்துக்கும் காரணம் இந்தியா தான், இரு-முனை போருக்கு தயார்: அறைகூவல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்
இந்தியாவை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஒரு முக்கியக் கருத்தை தெரிவித்துள்ளது

எல்லாத்துக்கும் காரணம் இந்தியா தான், இரு-முனை போருக்கு தயார்: அறைகூவல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 17, 2025
08:49 am

செய்தி முன்னோட்டம்

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் பாகிஸ்தான் கடுமையான எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ள சூழ்நிலையில், இந்தியாவை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஒரு முக்கியக் கருத்தை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காவ்ஜா ஆசிப், ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது புதிய கருத்துக்களை தெரிவித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தலிபான்களுடனான எல்லை மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இரு முனை போருக்கு நாடு(பாகிஸ்தான்) தயாராக இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். அதோடு ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசாங்கத்திற்குப் பின்னால் இந்தியா மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். "டெல்லி (இந்தியா) ஆதரவுடன் தாலிபான்கள் ஒரு மறைமுகப் போரை(Proxy War) நடத்துகின்றனர்" என்றும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், எல்லைப் பகுதியில் இந்தியா "தந்திரமாக" செயல்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பின்னணி

எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்

சமீப நாட்களாக பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபானுக்கும் இடையே எல்லையில் கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. இந்த மோதல்களுக்கு மத்தியில், இந்தியாவை ஒரு காரணமாகக் காட்டி பாகிஸ்தான் இத்தகைய கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், "பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதும், தனது உள்நாட்டுத் தோல்விகளுக்கு அண்டை நாடுகளைக் குறை கூறுவதும் பாகிஸ்தானின் பழைய நடைமுறை" என்று கடுமையாக விமர்சித்துள்ளது. அத்துடன், ஆப்கானிஸ்தானின் இறையாண்மைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பின் போராளிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் அளித்து வருவதாக இஸ்லாமாபாத் கூறுவதே மோதலின் மையமாக உள்ளது. இந்த அமைப்பு பாகிஸ்தானில் பள்ளிகள் உட்பட பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.