LOADING...
"சமாதானப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் போர் தான்!": தாலிபானுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா ஆசிப் எச்சரிக்கை
தாலிபானுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா ஆசிப் எச்சரிக்கை

"சமாதானப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் போர் தான்!": தாலிபானுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா ஆசிப் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 06, 2025
09:19 am

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லை பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், துருக்கியில் இன்று மீண்டும் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அது தாலிபானுடன் ஒரு 'போருக்கு' வழிவகுக்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா ஆசிப் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) தீவிரவாதிகளைத் தடுக்க காபூல் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோருகிறது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், நிலைமை மேலும் மோசமடையும் என்றும், "தங்கள் நாட்டிற்கு எதிராகத் தாக்குதல் தொடர்ந்தால், அதே பாணியில் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கலாம்" என்றும் காஜா ஆசிப் கூறியுள்ளார்.

விவரங்கள்

இதற்கு முன் நடந்த இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது

இதற்கு முன் தோஹா மற்றும் இஸ்தான்புல்லில் நடந்த இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க ஒப்புக்கொண்டாலும், ஆழ்ந்த அவநம்பிக்கை தொடர்வதாக அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர். மறுபுறம் TTP போராளிகள் "பாகிஸ்தான் அகதிகள்" என்று காபூல் கூறுவதை ஆசிப் நிராகரித்துள்ளார். "அகதிகள் எப்படி கனரக ஆயுதங்களுடன், மலைப்பாதைகள் வழியாக திருடர்கள் போல ஊடுருவ முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார். எல்லை தாக்குதல்களை தடுக்க தாலிபான் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் வரை ஆப்கானிஸ்தானுடனான உறவு இயல்பு நிலைக்கு திரும்பாது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.