இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் தீவிரமடைந்ததால் 500க்கும் மேற்பட்டோர் பலி
இஸ்ரேலில் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலால் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, காசா மீது இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலின் போது 230க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களின் மறைவிடங்களை இடித்து தரைமட்டமாக்கப் போவதாக சபதம் எடுத்துள்ளார். நேற்று தொடங்கிய இந்த போரின் போது, பலஸ்தீனக் குழு டஜன் கணக்கான இஸ்ரேல் வீரர்களைக் கைப்பற்றியதால் இஸ்ரேல் இராணுவம் கணிசமான இழப்புகளைச் சந்தித்தது. "பயங்கரவாதிகள் வீடுகளுக்குள் புகுந்து, பொதுமக்களைக் கொன்று குவித்தனர். நூற்றுக்கணக்கானோர் நாட்டுக்குள் ஊடுருவினர். நூற்றுக்கணக்கானோர் இஸ்ரேல் துருப்புக்களுடன் சண்டையிட்டனர்" என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் ஹெக்ட் கூறினார்.
இஸ்ரேலுக்கு அசைக்க முடியாத ஆதரவைத் தெரிவித்திருக்கும் அமெரிக்கா
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம், அங்கு வாழும் குடிமக்களை விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்ரேலின் போர் நிலை குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை ஒரு அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு "திடமான மற்றும் அசைக்க முடியாத" ஆதரவைக் குரல் கொடுத்தார்.மேலும், இந்த சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு எதிராக அமெரிக்காவும் நிற்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன போராளிகள் நேற்று அதிகாலை நடத்திய மிகப்பெரும் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் தொடங்கியது.