'கைப்பாவைகள் அல்ல நாங்கள்': இந்திய ஊடகங்களுக்கு தைவான் பேட்டியளிக்க கூடாது என்று கூறிய சீனாவுக்கு தைவான் பதில்
தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூவின் இந்திய ஊடகச் சேனலுக்கு பேட்டியளித்தது குறித்து இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், தைவான் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு இந்திய ஊடகங்கள் இடமளிப்பதாக சீனா குற்றம் சாட்டி இருந்தது. இந்நிலையில், சீனாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தைவான் அரசாங்கம், இந்தியாவும் தைவானும் சுதந்திரமான மற்றும் துடிப்பான பத்திரிகைகளைக் கொண்ட ஜனநாயக நாடுகள் என்று கூறியுள்ளது. தைவானுக்கு எதிரான 'ஒரே சீனா கொள்கையை' இந்தியா பின்பற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், தைவானுடன் இந்தியாவுக்கு முறையான ராஜதந்திர உறவுகள் எதுவும் இல்லை.
இரு நாடுகளின் அறிக்கைகள்
"29 பிப்ரவரி 2024 அன்று, சில இந்திய தொலைக்காட்சிகள் தைவானின் வெளியுறவு அலுவலகத்தின் தலைவர் ஜோசப் வூவின் நேர்காணலை ஒளிபரப்பியது. 'தைவான் சுதந்திரம்' மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதற்கு அது அவருக்கு ஒரு மேடையாக அமைந்தது. 'ஒரே சீனா கொள்கையை' மீறுவதாகவும் அது அமைந்திருந்தது. அதனால் அதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது." என்று சீனத் தூதரகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த தைவானின் வெளியுறவு அமைச்சகம், "இந்தியாவோ அல்லது தைவானோ PRCயின்[மக்கள் குடியரசின்] ஒரு பகுதியாக இல்லை. நாங்கள் சீனாவின் கைப்பாவைகள் அல்ல. எங்கள் இரு நாடுகளும் பிறரது ஆணைகளுக்கு இணங்காத சுதந்திரமான மற்றும் துடிப்பான பத்திரிகைகளைக் கொண்ட ஜனநாயக நாடுகளாகும்." என்று கூறியுள்ளது.