கிழக்கு கடற்கரை பகுதியில் அடுத்தடுத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வட கொரியா: கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்
செய்தி முன்னோட்டம்
தென் கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியை ஒட்டிய கடல் பகுதியில் வட கொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் பியாங்சாங் பகுதியிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளில் குறைந்தது ஒன்று 900 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடந்து கிழக்கு கடற்பகுதியில் விழுந்ததாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகள் (JCS) தெரிவித்தனர். ஜப்பான் கடலோரக் காவல்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்திய தகவலின்படி, குறைந்தபட்சம் இரண்டு ஏவுகணைகள் கண்டறியப்பட்டு, அவை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு (EEZ) வெளியே உள்ள கடற்பகுதியில் விழுந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி
பதற்றத்திற்கான பின்னணி
தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் மேற்பார்வையில் சமீபத்தில் தென் கொரியா தனது முதல் அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், தனது பலத்தை காட்டும் நோக்கத்துடனும் வட கொரியா இந்த ஏவுகணைச் சோதனைகளை நிகழ்த்தியுள்ளதாக ராணுவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே, வட கொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணைச் சோதனைகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் (UNSC) தீர்மானங்களை மீறும் செயல் எனக் கண்டனம் தெரிவித்துள்ள தென் கொரிய அரசு, உடனடியாக இதுபோன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன், அவசரப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளது.