மீண்டும் நிபா வைரஸ் அச்சுறுத்தல்: பயண கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தும் ஆசிய நாடுகள்
செய்தி முன்னோட்டம்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் சுகாதாரத் துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இதுவரை 180 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதில், 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 20 பேர் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட செவிலியர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள்
பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச கண்காணிப்பு
இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன: தாய்லாந்து: ஜனவரி 25 முதல் மேற்கு வங்கத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு சுவர்ணபூமி உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் காய்ச்சல் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு அட்டைகள் வழங்கப்படுகின்றன. நேபாளம்: இந்திய எல்லைகளில் உள்ள தரைவழிப் போக்குவரத்து மற்றும் காத்மாண்டு விமான நிலையத்தில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்படுகிறது. தைவான்: நிபா வைரஸை "வகை-5" (Category 5) என்ற மிக ஆபத்தான நோய்ப் பட்டியலில் சேர்த்து அந்நாடு கண்காணித்து வருகிறது.
அறிகுறிகள்
நிபா வைரஸ்: அறிகுறிகள் என்ன?
வௌவால்கள் மூலம் பரவும் இந்த வைரஸ், மனிதர்களிடையே நேரடி தொடர்பு மூலமும் பரவக்கூடியது. காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் தசைவலி ஆகியவை இதன் ஆரம்ப அறிகுறிகளாகும். தீவிரமடையும் போது மூளைக்காய்ச்சல் (Encephalitis) மற்றும் சுவாச பாதிப்புகளை ஏற்படுத்தி மரணத்திற்கு (40% - 75% இறப்பு விகிதம்) வழிவகுக்கும். உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த வைரஸை மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய நோய் பட்டியலில் சேர்த்துள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்கவும், பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.