நிஜ்ஜார் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர் மாணவர் விசாவில் கனடாவிற்குள் நுழைந்தார்: அறிக்கை
காலிஸ்தானி பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இந்தியர்களில் ஒருவர், ஸ்டுடென்ட் விசா பயன்படுத்தி கனடாவிற்குள் நுழைந்ததாக கனடாவை தளமாகக் கொண்ட குளோபல் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மே 3ஆம் தேதி மேலும் இருவருடன் கைது செய்யப்பட்ட கரண் ப்ரார் என்பவர், 2019இல் வெளியிடப்பட்ட வீடியோவில், பஞ்சாபின் பதிண்டாவில் உள்ள EthicWorks இமிக்ரேஷன் சர்வீசஸ் மூலம், மாணவர் விசாவிற்கு விண்ணப்பித்ததாகவும், சில நாட்களில் அதைப்பெற்றதாகவும் கூறினார். சாதாரணமாக, கனடா மாணவர் விசா பெறுவதற்கு தோராயமாக 7-9 வாரங்கள் ஆகும். EthicWorks இமிக்ரேஷன் சர்வீசஸ் தனது பேஸ்புக் பக்கத்தில், பிரார் ஒரு கனேடிய ஸ்டுடென்ட் விசா வைத்திருக்கும் புகைப்படத்துடன் விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது. இருப்பினும் அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளது.
ஸ்டுடென்ட் விசாவில் கனடா சென்ற ப்ரார்
ஏப்ரல் 30, 2020 அன்று ப்ரார் கால்கேரியின் போ வேலி கல்லூரியில் படிக்கத் தொடங்கினார் என்று குளோபல் நியூஸ் அறிக்கை கூறியது. அவர் மே 4, 2020 அன்று எட்மண்டனுக்குச் சென்றார். இது குறித்து அக்கல்லூரியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிரார் எட்டு மாத மருத்துவமனை பிரிவு எழுத்தர் திட்டத்தில் சேர்ந்தார். இருப்பினும், நிஜ்ஜாரின் கொலைக்காக கைது செய்யப்பட்டவர், அதே நபரா என்பதை செய்தித் தொடர்பாளரால் உறுதிப்படுத்த முடியவில்லை என இந்தியா டுடே செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், கல்லூரி "Ethicworks இமிக்ரேஷன் சர்வீசஸ்" என்ற நிறுவனத்துடன் ஒருபோதும் இணைந்திருக்கவில்லை" என்றும் கூறியது.
நிஜ்ஜார் கொலை வழக்கில் இதுவரை 3 பேர் கைது
ஹர்தீப் நிஜ்ஜார் கொலை வழக்கில் இதுவரை மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவருமே, மே 3 அன்று ஆல்பர்ட்டாவின் எட்மண்டனில் கைது செய்யப்பட்டனர் மற்றும் முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். பிராரைத் தவிர, மற்ற இருவரும் கரன்ப்ரீத் சிங், 28, மற்றும் கமல்ப்ரீத் சிங், 22 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் இந்திய அரசாங்கத்துடன் தொடர்புபடுத்தும் எந்த ஆதாரத்தையும் கனேடிய காவல்துறை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 18, 2023 அன்று சர்ரேயில் உள்ள ஒரு குருத்வாராவிற்கு வெளியே ஹர்தீப் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.